நாட்டை நிர்வகிக்கும் போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதுடன், நீதித்துறையின் சுதந்திரமும் சட்டத்தின் ஆட்சியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்திற்கு ஆதரவளித்த தொழிற்சங்கங்கள்கூட தற்போது எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடத் தயாராகி வருவதாகத் தெரிவித்தார். அவ்வாறான போராட்டங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பொலிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நீதித்துறையில் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் பல நீதிபதிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கக்கூடும் எனவும் சந்தேகம் வெளியிட்டார்.
அத்துடன், நிலக்கரி கொள்வனவு தொடர்பான இழப்பு, 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம், கடவுச்சீட்டு பிரச்சினை மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.








