நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அடுத்த ஆண்டு முதல் வீடமைப்பு நிர்மாண உதவித் தொகையை 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மக்களிடமிருந்து வரிப் பணத்தைச் சேகரிப்பது, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை மீண்டும் சலுகைகளாக மக்களுக்கே வழங்குவதற்காகவே எனத் தெரிவித்த அவர், இந்த ஆண்டில் வீடமைப்பு நிர்மாண உதவியாக வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாவை, அடுத்த ஆண்டில் 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாட்டின் திறைசேரியில் உள்ள அனைத்து நிதியையும் அரச ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் ஒதுக்கீடு செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்மாணத் துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வது அவசியமானது எனவும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.







