இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் கனமழை பெய்யும் காலங்களில் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியல் சிரேஷ்டப் பேராசிரியர் அதுல செனரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கனமழைக்குப் பின்னர் நீர்த்தேக்கங்கள் முழுமையாக நீரால் நிரம்பும்போது, அவற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பாறை அடுக்குகளில் அழுத்தம் அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அழுத்த மாற்றங்கள் பாறை அடுக்குகளில் ஏற்கனவே காணப்படும் பிளவுகளில் சிறிய அசைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், அவை நில அதிர்வுகளுக்கு ஒரு காரணமாக அமையலாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் கூடுதலான நில அதிர்வுமானிகளை நிறுவ வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் மாத்திரம் 13 முதல் 14 வரையிலான நில அதிர்வுமானிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்படும் சில நிலநடுக்கங்கள் இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, இந்தோனேசியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஆழமற்ற கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் இலங்கைக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் வசதிகளை அதிகரிப்பதன் மூலம் அவற்றை உரிய முறையில் பதிவுசெய்து, அபாயங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








