ஜயரத்ன இறுதிச்சடங்கு சேவை நிறுவனத்தின் (Jayaratne Funeral Directors (Pvt) Ltd) பணிப்பாளர் ஒருவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் இலக்கு வைத்து, திரிபுபடுத்தப்பட்ட ஒலிப்பதிவு மற்றும் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரை எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய நேற்று (24) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னணி இறுதிச்சடங்கு சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜயரத்ன நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இதன்போது, நிறுவனப் பணிப்பாளருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் ஒலிப்பதிவு மற்றும் புகைப்படம் ஆகியவற்றைத் திரிபுபடுத்தி பேஸ்புக்கில் வெளியிட்டதாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட தண்டனைச் சட்டக்கோவையின் 345ஆம் பிரிவு மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 486, 285ஆம் பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன, குறித்த காணொளியை சுமார் 5,000 பேஸ்புக் பயனர்கள் பார்வையிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதனால் நிறுவனப் பணிப்பாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாரிய உளவியல் பாதிப்புகளும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஏனைய பாதிப்புகளை சாதாரணமாகக் கருத முடியாது எனவும் பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேகநபரின் பிணை மனுவை நிராகரித்து அவரை எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.








