மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய ராஜாங்கனை சத்தாரதன தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், ராஜாங்கனை சத்தாரதன தேரர் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு, பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் அவதூறான அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் பிணை நிபந்தனைகளை விதித்திருந்தது.
எனினும், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பிணை நிபந்தனைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பிடியாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.







