கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் நகரில், ஐந்து மாத காலப்பகுதியில் ஐந்து வெவ்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 91 வயது முதியவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாத நடுப்பகுதியில், பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, கடந்த ஜூலை முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், பர்லிங்டன் நகரில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த இரண்டு வயது வந்த பெண்கள் மீது இடம்பெற்ற ஐந்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுடன் குறித்த சந்தேகநபருக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பர்லிங்டன் நகரைச் சேர்ந்த 91 வயதான எவால்ட் ராட்கே (Ewald Radtke) என்பவர் கடந்த நவம்பர் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக ஐந்து பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் இதுவரை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யாமல் இருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனால், மேலதிக பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







