திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை (Pre-shoot) எடுப்பதற்காக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சீருடையில் தாடியுடன் கண்டி நகரில் காத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, யட்டிநுவர வீதி மற்றும் கொழும்பு வீதி சந்திப்புக்கு அருகில் முகம் முழுவதும் தாடியுடன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சீருடையில் ஒருவர் நிற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கண்டி தலைமையக பொலிஸார் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது தெரியவந்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது திருமணத்தை முன்னிட்டு இந்து மத சம்பிரதாயத்தின்படி தாடி வளர்த்து வருவதாகவும், தனது காதலியுடன் திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை எடுப்பதற்காகவே அந்த இடத்தில் காத்திருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்து மத சம்பிரதாயங்களுக்கு அமைய திருமணத்தில் தாடியுடன் பங்கேற்பதற்குப் பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகம் முழுவதும் தாடி வளர்ப்பதற்கு அனுமதி கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் குறித்த உத்தியோகத்தர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







