2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மூலம் கிடைத்த மொத்த வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 14.41 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு 6.03 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதித் துறைகளின் சாதகமான பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகளின்படி, பொருட்கள் ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான 11.36 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 5.72 சதவீதம் அதிகரித்து, இவ்வாண்டு 12.01 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதிப் போட்டித்தன்மையை வலுப்படுத்துதல், புதிய சர்வதேச சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியைப் பன்முகப்படுத்துதல், அத்துடன் அதிக பெறுமதி கொண்ட வளர்ந்து வரும் ஏற்றுமதித் துறைகளை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகள் இந்த முன்னேற்றத்திற்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் தெரிவித்துள்ளது.







