இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கடற்றொழில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இதற்கமைய, இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்று, அந்நாட்டு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இந்தியா – இலங்கை கடற்றொழில் தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் (JWG) கூட்டமாக நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன.
குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைதல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அவற்றால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலில் இலங்கை கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸ், கடலோரக் காவல்படை, தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடைபெற்ற இரு நாடுகளினதும் கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் தமிழக அரச தரப்பினர் ஆகியோரும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் இந்திய – இலங்கை நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








