அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளான சீனா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வர்த்தகத் தீர்வை வரிகளை விதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
உற்பத்தித் துறைகளில் நிலவும் கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி நடைமுறைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ‘பிரிவு 301’ (Section 301) விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நாடுகள் மற்றும் பொருளாதாரப் பிராந்தியங்களில் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, தென்கொரியா, வியட்நாம், தாய்வான், பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை அடங்குகின்றன.
இந்நிலையில், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு வரி விகிதங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன்படி, சீனப் பொருட்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்படவுள்ளதுடன், வியட்நாமுக்கு 35 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்படவுள்ளது. ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரையான வரிகள் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரி உச்சவரம்புகளின் அடிப்படையில், சில நாடுகளுக்கான நடைமுறை வரி விகிதங்கள் குறைக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தகச் சூழலில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளுடனான பொருளாதார உறவுகளிலும் மாற்றங்களை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








