இலங்கையில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 9,613 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது.
2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிடைத்துள்ள இந்த முறைப்பாடுகள், நாட்டில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் புள்ளிவிபரங்களின்படி, பதிவான முறைப்பாடுகளில் 51 பதின்ம வயதுக் கர்ப்பங்கள், 169 சிறுவர் பாலியல் வல்லுறவு சம்பவங்கள், 114 பாரிய பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் மற்றும் 364 பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகள் உள்ளடங்குகின்றன.

மேலும், நிர்வாணப் புகைப்படங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்திய இணையவழித் துன்புறுத்தல் தொடர்பாக 196 முறைப்பாடுகளும், சிறுவர் திருமணம் தொடர்பாக 9 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அதேவேளை, சிறுவர்கள் மீதான கொடுமைகள் தொடர்பாக 1,889 முறைப்பாடுகளும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் சிறுவர்கள் தொடர்பாக 2,387 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
பாலியல் துஷ்பிரயோகங்களைத் தாண்டியும் பல்வேறு பிரச்சினைகள்
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை.
அந்த வகையில், சிறுவர் தொழிலாளர் தொடர்பாக 153 முறைப்பாடுகளும், கட்டாயக் கல்வி தொடர்பாக 1,592 முறைப்பாடுகளும், சிறுவர்களைக் கடத்திச் செல்லுதல் தொடர்பாக 146 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
மனிதக் கடத்தல் தொடர்பாக 40 முறைப்பாடுகளும், ஆபாச வெளியீடுகள் தொடர்பாக 103 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
மேலும், ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவு கோரி 719 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பாவனை தொடர்பாக 99 முறைப்பாடுகளும், குடும்ப வன்முறை தொடர்பாக 46 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இதற்கு மேலதிகமாக, சிறுவர்களின் தற்கொலை முயற்சிகள் தொடர்பாக 19 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
மாவட்ட ரீதியான புள்ளிவிபரங்களின்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 991 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் 821 முறைப்பாடுகளும், குருநாகல் மாவட்டத்தில் 623 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் ஒப்பீட்டளவில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
2026ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதமே அதிகளவான முறைப்பாடுகள் பதிவான மாதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தகவல்களின்படி, 2024ஆம் ஆண்டில் 53 பதின்ம வயதுக் கர்ப்பங்கள், 500 பாலியல் தாக்குதல் சம்பவங்கள், 3 சிறுவர் கருக்கலைப்பு சம்பவங்கள், 42 சிறுவர் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மற்றும் 321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதேபோன்று, 2025ஆம் ஆண்டில் 46 பதின்ம வயதுக் கர்ப்பங்கள், 545 பாலியல் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் 98 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதற்கிடையில், முறைப்பாடுகளின் எண்ணிக்கைக்கும் குற்றங்களின் எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதற்கான காரணத்தையும் அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, ஒரே முறைப்பாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்கள் உள்ளடங்கியிருக்கக்கூடும் என்பதால், குற்றங்களின் எண்ணிக்கையும் மாவட்ட ரீதியாகப் பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் ஒன்றுக்கொன்று வேறுபடலாம் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கும் குடும்பங்கள், பாடசாலைகள் மற்றும் சமூக மட்டத்தில் விழிப்புணர்வும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம் என்பதை இந்தப் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.







