தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், மேலதிக வான் கதவுகளும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தெதுரு ஓயாவின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நீர்வரத்து அதிகரிப்பினால் ஆற்றின் இரு கரைகளையும் அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.







