யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வீதியொன்றில், மாநகர சபையின் அனுமதியின்றி வீதி எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகற்றப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தினால் வீதி எல்லைக்குள் அனுமதியின்றிக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டவிரோதமான கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, நேற்று (25) பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் முன்னிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதம பொறியியலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் குறித்த கட்டுமானத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, குறித்த கட்டுமானத்துடன் தொடர்புடைய வகையில் பிரதான வீதியின் மழைநீர் வடிகால் வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டு, நீரோட்டம் தடைசெய்யப்பட்டிருந்தமை தொடர்பில் மாநகர முதல்வர் வி. மதிவதனிக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாநகர முதல்வர், மழைநீர் வடிந்தோடுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தடைகளை உடனடியாக அகற்றுமாறு மாநகர சபையின் பொதுச் சுகாதார பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கைகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
மாநகரப் பகுதிகளில் வீதி எல்லைகளை ஆக்கிரமித்தல் மற்றும் மழைநீர் வடிகால்களின் நீரோட்டத்தைத் தடைசெய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக மாநகர சபை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை இந்தச் சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது.







