செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், செம்மணி மனிதப் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அதிகளவில் மீட்கப்படுவது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் நீதி அமைச்சர் ஏற்கனவே தலையிட்டு செயற்பட்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது பல்வேறு சோதனைகளும் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவதானிக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.







