இலங்கையில் தற்போது நெல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் வயல்களின் பரப்பளவில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கையாவது குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
‘சுபிரி வீ யாய 10+’ (Supiri Vee Yaya 10+) வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நெல் உற்பத்தி போதுமான அளவில் காணப்படுவதாகவும், ஆனால் உற்பத்தி செய்யப்படும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்குப் போதிய சந்தை வாய்ப்புகள் இல்லாதிருப்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த பெரும்போகப் பருவத்தின் அறுவடை கிடைப்பதற்கு முன்னரே சந்தையில் நெல் மற்றும் அரிசி இருப்புகள் அதிகளவில் குவிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த நிலைமை விவசாயிகளுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார்.
மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் கையிருப்பில் உள்ள நெல்லை ஒரே நேரத்தில் சந்தைக்கு வெளியிட்டால் அரிசி மற்றும் நெல்லின் விலைகள் மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரிசியின் விலையை அளவுக்கு அதிகமாகக் குறைப்பதன் மூலம் விவசாயத்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை நெல் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தாமல், ஏனைய தானியங்கள் உள்ளிட்ட மாற்றுப் பயிர்ச்செய்கைகளையும் ஊக்குவிக்க வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர், உபரி நெல்லை ஏற்றுமதி செய்தல், அரிசியை அடிப்படையாகக் கொண்ட மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விவசாயிகளை மாற்றுப் பயிர்ச்செய்கைகளுக்கு வழிநடத்துதல் உள்ளிட்ட தீர்வுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய உற்பத்தி மற்றும் சந்தை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நெல் வயல்களில் மூன்றில் ஒரு பகுதியைப் பயிர்ச்செய்கையிலிருந்து விடுவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.







