மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனைப் பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், மகாவலி அதிகாரசபையினால் அடையாளப்படுத்தப்பட்டு எல்லை குறிக்கப்பட்டுள்ள 1,572 ஏக்கர் காணியை வன இலாகா திணைக்களத்திடமிருந்து விடுவித்து, வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டபூர்வமாக்குவது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு வன இலாகா அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துநெத்தி பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் திட்டமிடல் கூட்டம் இன்று (26) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில், அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, 2026ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறு வழிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் அந்த நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் நவனீதன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளின் செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









