மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அநாதரவான நிலையில் கைவிட்டுச் சென்ற சம்பவம் நேற்று (26) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் 119 அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, வீதிச் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, மக்கள் நடமாட்டம் குறைந்த வீதியில் நோயால் அவதிப்பட்ட நிலையில் குறித்த பெண் அநாதரவாகக் காணப்பட்டுள்ளார். அவரை அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பிற்பகல் 1.00 மணியளவில் குறித்த பெண்ணை மீட்ட பொலிஸார், 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை அழைத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







