ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்குச் சொந்தமான இரண்டு பழமையான துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிடம் ஒப்படைக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுமார் 250 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட இந்தத் துப்பாக்கிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலுள்ள தேசிய அருங்காட்சியகமான Rijksmuseum இல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிகள் தொடர்பில் அந்த அருங்காட்சியகத்தின் ஆய்வாளர்களும் இலங்கை ஆய்வாளர்களும் இணைந்து நீண்டகால ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, அவை இலங்கைக்குச் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1765ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களுக்கும் கண்டி இராச்சியத்துக்கும் இடையில் இடம்பெற்ற போரின்போது இந்தத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவற்றில் ஒரு துப்பாக்கியில் கண்டி இராச்சியத்தின் அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், 2023ஆம் ஆண்டிலும் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு பழங்காலத் துப்பாக்கிகளை நெதர்லாந்து மீண்டும் இலங்கையிடம் ஒப்படைத்திருந்தது.
இந்நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க துப்பாக்கிகளையும் மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.







