மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்துக் காயப்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த குரங்கு ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பாகப் பிடித்துள்ளனர்.
குறித்த குரங்கு கடந்த ஒரு மாதமாகப் பலரைக் கடித்துக் காயப்படுத்திவிட்டு, மறைந்திருந்து தப்பித்து வந்துள்ளது. இந்நிலையில், இறுதியாக மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் மேலும் மூவரைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய, அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்திய நிபுணர்கள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் குழுவினர், மட்டக்களப்பு அதிகாரிகளுடன் இணைந்து குரங்கைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் குரங்கு பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு, அம்பாறை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.
கடந்த ஒரு மாதமாகக் குரங்கின் தொடர் தாக்குதல்களால் அச்சத்தில் வாழ்ந்து வந்த அப்பகுதி மக்கள், குரங்கு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிம்மதி அடைந்துள்ளனர்.







