இலங்கையில் வணிகங்கள் அந்நியச் செலாவணி அபாயங்களைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் உலக வங்கிக் குழுமம் நீண்டகால இலங்கை ரூபாய் நிதியுதவியை விரிவுபடுத்தியுள்ளது.
இதற்கமைய, உலக வங்கிக் குழுமத்தின் திறைசேரி, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்திற்கும் (IFC) HSBC ஸ்ரீலங்காவிற்கும் இடையில் ஆறு ஆண்டுகால ரூபாய் கடன் வசதியை ஏற்பாடு செய்துள்ளது. ஆசியாவில் இதுவொரு முன்னெப்போதும் இல்லாத பரிவர்த்தனையாகும்.
அமெரிக்க டொலர் 5 மில்லியனுக்குச் சமமான நிலையான வட்டி வீதத்திலான இந்த நிதி வசதி, இலங்கையில் IFC பெற்றுக்கொள்ளும் முதலாவது கடன் வசதியாகும்.
இந்த வசதியின் மூலம், இலங்கையின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றிற்கு IFC வழங்கும் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, 10 ஆண்டுகால ரூபாய் கடனுக்கும் ஆதரவு வழங்கப்படவுள்ளது.
இது IFC வழங்கிய மிக நீண்டகால ரூபாய் கடனாகவும், அதன் முதலாவது ரூபாய் உட்கட்டமைப்புக் கடனாகவும் அமைவதுடன், அண்மைய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையின் உட்கட்டமைப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலாவது முதலீடாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் நாணயமான ரூபாயில் நிதியைப் பெற்றுக்கொள்வதன் மூலம், நிறுவனங்கள் தமது வருமானம் ஈட்டப்படும் அதே நாணயத்தில் கடனைப் பெற முடிவதுடன், நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயங்களையும் குறைக்க முடியும்.
இந்த முதலாவது நிதி வசதியை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் நீண்டகால உள்ளூர் நாணய நிதியுதவியை மேலும் விரிவுபடுத்தி, தனியார் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உலக வங்கிக் குழுமம் திட்டமிட்டுள்ளது.







