மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தைக் கையளித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏற்படும் அழுத்தங்கள் காரணமாகவே இராஜினாமா செய்யத் தீர்மானித்ததாக அவர் நேற்று (26) தெரிவித்துள்ளார்.
தனது கடமைகளை நேர்மையாகவும், நடுநிலையாகவும், பக்கச்சார்பின்றியும் முன்னெடுத்து வந்தபோதிலும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்படுவதாகவும், இந்நிலையில் தொடர்ந்து பதவியில் நீடிப்பதில் பயனில்லை எனக் கருதியே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டின் இறுதியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மேல் மாகாண ஆளுநரால் காமினி ஜாசிங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
தனது பதவிக்காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கண்டறிய திடீர் சோதனைகளை முன்னெடுத்ததுடன், Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகளின் ஒழுக்கம் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







