பேலியகொடையில் அமைந்துள்ள சுங்கக் களஞ்சியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 18.19 கோடி ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரும் களஞ்சியசாலையில் பணியாற்றும் சுங்க அதிகாரிகளும் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று பொதிகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசேட பரிசோதனையின்போது சந்தேகத்திற்கிடமான பொதிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவற்றைப் பெற்றுக்கொள்ள வருபவர்களைக் கைது செய்யும் நோக்கில் பொதிகள் தடுத்து வைக்கப்பட்டன.
எனினும், நீண்ட காலமாகியும் அவற்றைப் பெற்றுக்கொள்ள எவரும் வராததால், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் முன்னிலையில் பொதிகள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.
இதன்போது, பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.193 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆரம்பகட்ட சுங்க விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.







