தென்கொரியாவின் கியோங்கி மாகாணத்திலுள்ள ஹ்வாசொங் நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9.10 மணியளவில், 7.5 தொன் எடையுடைய சரக்கு லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட மரத்தாலான வீட்டின் கூரையின் ஒரு பகுதி, லொறியின் சரக்குப் பகுதியைத் தாண்டி நீட்டியிருந்த நிலையில், வீதியோரமாக நடந்து சென்ற இரு இலங்கையர்கள் மீது மோதியுள்ளது.
அருகிலுள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து முடித்துவிட்டு தங்களது தங்குமிடத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்த 39 மற்றும் 31 வயதுடைய இருவரும் இந்த விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கோடகவெல, ரண்வல பகுதியைச் சேர்ந்த தேஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன மற்றும் வலப்பனை, ஹல்கிரனோயா பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் பிரசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது லொறியின் சாரதி மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பாவனையிலோ இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், வீதியின் ஓரத்தைச் சரியாக அவதானிக்கத் தவறியதாக சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ள தென்கொரியப் பொலிஸார், லொறியில் சரக்குகளை ஏற்றிச் சென்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த இருவரினதும் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு இணைந்து முன்னெடுத்து வருகின்றன







