முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை நினைவேந்தல் நிகழ்வுகளின்போது காட்சிப்படுத்தியமை தொடர்பில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொலிஸார் உன்னிப்பாகக் கண்காணித்ததாகவும், அதற்கான வர்த்தமானி விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரான திலீபனின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியமை தொடர்பிலும் நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு அல்லது தெற்கு என எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் முன்னர் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் பழைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சில, இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.








