மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (30) இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி இருவரும், கடலில் மூழ்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், கடலில் தவறி வீழ்ந்த இளைஞர் ஒருவரும் காணாமல் போயுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம்,வனத்து அந்தோனியார் வீதியிலுள்ள வீடொன்றின் மேல்மாடிக் கூரையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த இருவர், அருகிலிருந்த அதியுயர் மின்னழுத்த மின்கம்பியில் சவல் பட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய வெள்ளையன் மகேந்திரன் மற்றும் 45 வயதுடைய மின்சாரத் திருத்தப் பணியாளரான கந்தையா மதன் ஆகியோரே உயிரிழந்தனர்.
இதேவேளை, பாலமீன்மடு கடற்பரப்பில் இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, கரை திரும்பும் வழியில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் படகிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து காணாமல் போயிருந்த நிலையில் அவரைத் தேடும் பணியில் கடற்படையினரும் மீனவர்களும் ஈடுபட்டிருந்தனர், பல மணிநேர தேடுதலின் பின்னர் அவர் சற்றுமுன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மற்றுமொரு சம்பவத்தில், குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த குருநாகல் பொலிஸ் நிலையத்தின் வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 57 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பாசிக்குடா கடலில் நீராடிக்கொண்டு கரைதிரும்பிய வேளை அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

குருநாகல், மெந்தகம, கனோட்டுவ, தெமட்டலுவ பகுதியைச் சேர்ந்த ஹித்தனதுரயலகே ஜெயவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் தொடர்பில் அந்தந்தப் பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







