கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் மஹார பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் புஸ்சல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வந்த சங்குவாரி தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் தர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர், கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது சித்தப்பாவைப் பார்வையிட்டுவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு அத்தை மற்றும் உறவினர் ஒருவருடன் வாடகை முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பின்னர் மதுபோதையில் வேனைச் செலுத்தி வந்த சாரதி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 15 வயது மாணவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் வேன் சாரதி, மருத்துவப் பரிசோதனையின்போது சிறுநீர் மாதிரிக்குப் பதிலாகத் தண்ணீரை வழங்கியதாகவும், வைத்தியரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மீண்டும் சிறுநீர் மாதிரியை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








