அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது அமைச்சரவையில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 59 வயதான அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹரிஸ் முன்னிறுத்தப்பட்டார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதனிடையே, கடந்த. 13-ம் தேதி பிரபல தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்டு டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேஸில் நடைபெற்றது. இந்த நேர்காணலை உலகம் முழுவதிலும் இருந்து நேரலையில் சுமார் 13 லட்சம் பேர் கேட்டதாக தகவல் வெளியானது.
இந்த நேர்காணலில், எலான் மஸ்க்கின் ஆட்டோமொபைல்களை வெகுவாக பாராட்டிய டிரம்ப், நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், எலான் மஸ்க்கிற்கு தனது அரசின் கீழ் அமைச்சர் துறையை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், வரி செலுத்துவோர் பணம் நல்ல முறையில் செலவழிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு கமிஷன் அமைக்கும் எலான் மஸ்க்கின் கருத்தை டிரம்ப் வரவேற்றார். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு எலான் மஸ்க் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனை ஆதரிப்பதாக மஸ்க் கூறியிருந்தார். ஆனால் டிரம்ப் மீதான படுகொலை முயற்சிக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட எலான் மஸ்க், “அதிபர் டிரம்பை முழுமையாக ஆதரிக்கிறேன். அவர் விரைவாக குணமடைவார் என்று நம்புகிறேன்” என தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.