முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை தான் நீதி அமைச்சராக இருந்த போதே வலியுறுத்தியதாக, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் நீதி அமைச்சராக வெறும் 19 மாதங்கள் மாத்திரமே பணியாற்றியதால், இதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்தக் குறுகிய காலத்திலும், தாங்கள் 100க்கும் மேற்பட்ட பழமையான சட்டங்களை மீண்டும் ஆய்வு செய்ததாகவும், அவற்றில் சுமார் 40 சட்டங்கள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சட்டம் செயல்படுத்துவது எளிதான அல்லது விரைவான செயல்முறை அல்ல என்றும் இது ஒரு சிந்தனையுடன் கூடிய மற்றும்; சிக்கலான பயணம் என்றும் அலி சாப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சிலர் இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட சட்டத்தை முற்றிலுமாக நீக்க விரும்பியதாகவும், எனினும் அவர்களின் காரணங்கள் நீதி அல்லது நியாயத்தின் அடிப்படையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் தம்மை பொறுத்தவரை, அந்த சட்டத்தை நீக்குவதை விட, சீர்திருத்தமே தேவைபட்டதாகவும் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.








