மக்கள் இன, மத, மொழி பேதங்களைத் தாண்டி அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வலுவான நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் இதனை தாங்க முடியாமல் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் குழப்ப நிலைகளை உருவாக்க முனைவதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டினார்.
மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். கடந்த ஆட்சிக்காலத்தில் காற்றாலைக்கு ஆதரவளித்தவர்களே, ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

புதிய காற்றாலை திட்டங்களுக்கு தற்போதைய அரசு அனுமதி வழங்கவில்லை. எனினும், முந்தைய ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட 22 காற்றாலை ஒப்பந்தங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஜனாதிபதியுடன் பேசிய போதே ஜனாதிபதி இதை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம், மின்சார தட்டுப்பாடு மற்றும் அதிக கட்டணத்தை குறைக்கும் நோக்கில், சூரிய மின்கலம் மற்றும் காற்றாலை போன்ற மாற்று மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தி அதற்கேற்ற வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.








