இலங்கை மின்சார சபையின் (CEB) விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு (VRS) விண்ணப்பித்த 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், திட்டம் தொடர்ந்து தாமதமடைவதால் கடும் மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற நிலையைக் எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, விருப்ப ஓய்வுத் திட்டம் நடைமுறைக்கு வரும் உறுதியான திகதியை உடனடியாக அறிவிக்க கோரியுள்ளனர். நீண்ட கால தாமதம் காரணமாக தங்களின் எதிர்காலத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தீவிரமான மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விண்ணப்பித்த பலர் சேவையிலிருந்து விலகிய பின் செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்காக மாற்று வேலை வாய்ப்புகளை தேடுதல், வியாபாரத் திட்டங்கள் அமைத்தல், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஆராய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கனவே தயாராகியிருந்ததாகவும் ஆனால் அதிகாரப்பூர்வ ஓய்வு திகதி அறிவிக்கப்படாததால் அந்தத் திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் தடுமாறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பின் பின்னணியில் துணை நிறுவனங்களுடன் இணைப்பு இல்லாத நிலையில் இருந்ததாலேயே தாங்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததாக ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த விண்ணப்பங்கள் இலங்கை மின்சாரச் சட்டம் (திருத்தம்) இல.36 – 2024 மற்றும் 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி இல.2451/11 என்பவற்றின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசின் மொத்த அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் விருப்ப ஓய்வுத் திட்ட முயற்சிக்கு தங்கள் நம்பிக்கை மற்றும் பாராட்டுத்தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஊழியர்கள், சிலரின் தேவையற்ற நடவடிக்கைகள் காரணமாகவே இந்த செயல்முறை மேலும் தாமதமடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் திட்டம் உண்மையில் நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் எதிர்கொள்ளும் வாழ்வாதார மற்றும் நலன் தொடர்பான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நியாயமும் கருணையும் கொண்டு இந்த விடயத்தை தீர்த்து, விருப்ப ஓய்வு திகதியை விரைவாக அறிவிக்க எரிசக்தி அமைச்சர் தலையிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








