மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் தமிழர்களின் நிலங்களும் இயற்கை வளங்களும் பறிபோகும் நிலைமைக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா நேற்று (16) காலை, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேணி 4ம் கட்டை பகுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் மாகாண தலைவர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தொடர்பான சிறப்பு உரைகள் மற்றும் அதிதிகள் உரைகள் இடம்பெற்றன. இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் வகையில், விவசாய உற்பத்திப் பொருட்களால் செய்யப்பட்ட அலங்காரங்கள் நிகழ்வின் முக்கிய அம்சமாகக் காணப்பட்டன.
கடந்த காலங்களில் வாகரை பிரதேசத்தில் வன இலாகா, தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு துறைகளினால் ஏற்பட்ட சவால்களை, மக்கள் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு தீர்வு கண்டதாகவும், எதிர்காலத்திலும் உருவாகக்கூடிய இத்தகைய பிரச்சினைகளை சமாளிக்க ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியம் என்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஒற்றுமையுடனான செயற்பாடுகளின் மூலமே எதிர்காலத்தில் எமது நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.





















