“புனைக்கதைகளை கூறி, மக்களை ஏமாற்றி ஆட்சிப் பலத்தைப் பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் அந்த புனைக்கதைகளை கூறியே ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே முயற்சித்து வருகிறது. ஈரான் யுத்தத்தால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை. நிலக்கரியினால் ஏற்பட்ட குறைபாடுகளை மூடிமறைப்பதற்காக அதிக எரிபொருள் பயன்படுத்தியமையின் காரணமாகவே எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக” ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் மின்சார துறையில் இடம்பெற்ற பாரிய மோசடிக்கு தண்டனை வழங்குவதற்காக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான ஆவணங்கள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
நிலக்கரியினால் ஏற்பட்ட குறைபாடுகளை மூடிமறைப்பதற்கு அதிக எரிபொருள் பயன்படுத்தியமையின் காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் கட்டமைப்பு நிர்வாக மின்சார நிறுவனத்தின் தரவுகளுக்கமைய, ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி உத்தியோகபூர்வ மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக இந்த மின் துண்டிப்பு இடம்பெற்றதாக கூறியிருக்கிறார்கள்.
ஆழ்ந்து இதை பரிசீலனை செய்யும்போது, தரம் குறைந்த நிலக்கரியினால் மின் உற்பத்தி தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. நிலக்கரியினால் ஏற்பட்ட குறைப்பாட்டை மறைப்பதற்காக எரிபொருளை பயன்படுத்தியுள்ளார்கள். அதனூடாக எரிபொருள் இருப்பு தீர்ந்தமையின் காரணமாகவே மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டதாக மின்னுற்பத்தி அறிக்கைகளில் குறிப்பிடப்படுகிறது.

புத்தாண்டின் பின்னர் மின் துண்டிப்பு அமுலாகுமென அநேகமானவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். இருந்தபோதும் நிலக்கரி மோசடியினால் ஏப்ரல் 04 ஆம் திகதியே மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மூடிமறைப்பதற்கு எதுவும் இல்லை. இதற்கான பொறுப்பை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்யும் கொள்கையினால் பாரிய மின்சக்தி பற்றுக்குறை ஏற்பட்டது.
அந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பல்வேறு வகையான எரிபொருள் வகைகள், உதாரணமாக டீசல், மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் வகைகள் பயன்படுத்தப்பட்டன. அதற்காக பெரும் நிதியை செலவளிக்க வேண்டி ஏற்பட்டது. அதற்காக, நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை காட்டிக்கொடுக்கும் நிலை உருவானது. வரிசைகளில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. தற்போது மின் துண்டிப்பையும் சந்திக்க நேர்ந்துள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினூடாக மீண்டும் மின் துண்டிப்பு தொடர்பில், மீள ஆராய்ந்து பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி முதற்கொண்டு சகலரும் ஒருபோதும் தாம் செய்த தவறுக்கு தண்டனை வழங்குபவர்களோ அவர்களின் தவறை ஏற்றுக்கொள்பவர்களோ இல்லை.
ஈரான் பிரச்சினையினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. புனைகதைகளை கூறி, மக்களை ஏமாற்றி ஆட்சி பலத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த புனைகதைகளை கூறியே ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே முயற்சித்து வருகிறார்கள். உங்களுக்கான மின் பாவனை இல்லாமல் போகிறது என்றால் அதற்கு காரணம் ஈரான் யுத்தமல்ல. ஈரான் யுத்தத்தினால் எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லை.

நிலக்கரியினால் ஏற்பட்ட குறைப்பாடுகளை மூடிமறைப்பதற்காக அதிக எரிபொருள் பயன்படுத்தியதாலேயே எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் மின்சாரத் துறையில் இடம்பெற்ற பாரிய மோசடிக்கு தண்டனை வழங்குவதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான ஆவணங்கள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.
சாதாரணமாக மூன்று மாதத்துக்கு ஒருமுறையே மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், மின் உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை பொதுப் பயன்பாடுகள் அதிகார சபைக்கு முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன என்றார்.








