யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் இன்று (02) 14ஆவது நாளாக எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
அகழ்வுப் பணிகளின் இதுவரையான முன்னேற்றத்தின்படி, மொத்தமாக 270 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 266 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்ட பின்னர் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளில் 257 மற்றும் 258 என இலக்கமிடப்பட்ட எச்சங்கள் சிறுவர்களுக்குச் சொந்தமானவை என ஆரம்பகட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மேலும், றுகுணு பல்கலைக்கழகம் மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அகழ்வின்போது கழுத்தில் அணியப்படும் தாயத்து போன்ற உலோகத் தகடு ஒன்றும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளில் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் பங்கேற்றனர்.








