டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து, மருந்துகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) தெரிவித்துள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அந்த அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மட்டுமன்றி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில மருந்துகளின் விலைகளையும் திருத்தி அமைப்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க வர்த்தமானி மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சுமார் 60 மருந்து வகைகளின் விலைகளிலும் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட NMRA தலைவர், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பொதுவாக இறக்குமதி சார்ந்த பொருட்களின் விலைகள் அதிகரிப்பது இயல்பான நிலை எனக் குறிப்பிட்டார். அதேவேளை, அனைத்து மருந்துகளின் விலைகளும் அதிகரிக்காது; குறிப்பிட்ட சில மருந்துகளின் விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








