திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவத்துக்கு மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும் என நிதி அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து ஆராய்வதற்காக அரசாங்க நிதி பற்றிய குழு நேற்று (08) பிற்பகல் கூடியது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பாக திறைசேரியால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு டிவி தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “360” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.








