யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் நான்காவது நாளாகவும் நேற்று (08) தொடர்ந்தது.
தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும், நீண்டகால சேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றைய போராட்டத்தில், சுகாதார தொண்டர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாகவும், கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலவும் சுகாதாரப் பணியாளர் வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக 92 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொண்டர்களாக பணியாற்றி வரும் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி சுகாதார தொண்டர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.








