மேற்கத்திய நாடுகளில் தங்கியிருக்கும், பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்ட இலங்கை குற்றவாளிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கு சர்வதேச காவல்துறையின் (Interpol) உதவியை நாடவுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று (21ஆம் திகதி) தெரிவித்தார்.
ஆசிய நாடுகளில் தலைமறைவாக இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பல குற்றவாளிகள் ஏற்கனவே நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள போதிலும், ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருக்கும் குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன.
துபாய், இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பல்வேறு மோசடிப் பேர்வழிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பியோட திட்டமிடுவதற்குக் காரணம், அவர்களை அங்கு வைத்து கைது செய்வதற்குத் தேவையான போதிய சட்டக் கட்டமைப்பு இல்லாமையே ஆகும் என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, ஆசிய நாடுகளில் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலும் தலைமறைவாக இருக்கும் இலங்கை குற்றவாளிகளை விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, சர்வதேச காவல்துறையினூடாக ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) அறிவித்தல்களை வெளியிடுவதற்கான புதிய வழிமுறையொன்றை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை காவல்துறை திட்டமிட்டுள்ளது.








