இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 55,406 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் புதிதாக 1,024 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் மட்டும் 21,565 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட வாரியாக அதிகளவு நோயாளர்கள் பதிவாகியுள்ள பகுதிகளில் கொழும்பு மாவட்டத்தில் 11,392 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 11,006 பேரும் அடங்குகின்றனர்.
பொதுமக்கள் நுளம்புகள் பெருகும் இடங்களை முறையாக சுத்தம் செய்யாததே டெங்கு பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு வேகமாக பரவி வருவதால், நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








