காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும், மனித–யானை மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைதீவை அண்மித்த பகுதிகளில் யானைகள் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் நடமாடும் பகுதிகளுக்குள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் அச்சத்தை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சந்தர்ப்பங்களில் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள தவிசாளர், பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

யானைகளின் நடமாட்டம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக தகவல்கள் கிடைத்து வருவதாகவும், இதனால் இரவு நேரங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் காரைதீவு பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமையை ஆராய வேண்டும் எனவும், யானைகள் குடியிருப்புகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடைமுறைச் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், யானைகளின் வழக்கமான நடமாட்டப் பாதைகள் மற்றும் அவை குடியிருப்புகளுக்குள் நுழையும் பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்கும் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் எனவும் தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், யானைகள் தொடர்பான அவசர நிலைமைகளில் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளும் வகையில் கண்காணிப்பு மற்றும் அவசர நடவடிக்கை பொறிமுறையை வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யானைகளால் விவசாயப் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய சேதங்களையும் கருத்திற்கொண்டு, மனித உயிர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் மேலும் தெரிவித்துள்ளார்.
“மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தாமதமின்றி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உயிரிழப்பு அல்லது பாரிய சொத்து சேதம் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, அதற்கு முன்னரே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.








