சீன சர்வதேச செய்தித் தொடர்பாடல் மையத்தின் (China International Press Communication Center) 2026ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித்திட்டம் நேற்று (04) சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தில் உலகின் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆசிய – பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 ஊடகவியலாளர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
சுமார் மூன்று மாதங்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, பங்கேற்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சீனாவின் பல்வேறு மாகாணங்களுக்கு விஜயம் செய்து, அந்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார நிலைமைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
இதன்போது பயிற்சிப் பட்டறைகள், சிறப்பு கலந்துரையாடல்கள், நேர்காணல்கள் மற்றும் சீன கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தெற்கு உலக நாடுகளின் ஊடக நிறுவனங்களுக்கு இடையே நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தளத்தை உருவாக்குதல் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு சீனா தொடர்பான விரிவான புரிதலை ஏற்படுத்துதல் ஆகியவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
2014ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இதுவரை உலகின் 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







