அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் இராணுவ மோதலை “போர்” என அழைக்க மறுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது தங்களுக்கு “சிறிய விடயம்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், ஈரானுடனான தற்போதைய மோதலை போர் என வரையறுக்க முடியாது எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ட்ரம்ப், ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியான தாக்குதல்களாக இல்லாமல் இடைவிட்டு இடம்பெறுவதாகவும், இதனை பலர் போர் என அழைப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த மோதலில் இதுவரை 18 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதுடன், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு 37.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னர் இந்த மோதல் முடிவுக்கு வரும் என உறுதியான கணிப்பை வெளியிட துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மறுத்துள்ளார்.
மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் பெருமளவில் பாதித்துள்ளதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.







