போர் முடிவடைந்துள்ள நிலையில், இனிமேல் நாட்டில் மீண்டும் போர் ஏற்படும் என தாம் நம்பவில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள் நேற்று (21) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அவரைச் சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவை இராணுவத்தினரின் காணிகள் அல்ல, பொதுமக்களின் சொந்தக் காணிகளே என்றும் வலியுறுத்தினார்.

சில தரப்பினர் இந்த விடயத்தை இனவாத நோக்கில் தவறாக சித்தரித்து வருவதாகவும், காணி விடுவிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, அபிவிருத்தித் திட்டங்கள், காணி விடுவிப்பு நடவடிக்கைகள், மாகாண சபைத் தேர்தல், செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் இந்தியாவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், வடக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக மூன்று புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டம் தொடர்பிலும் தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.








