ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை உரிமையாளர்கள் இதுவரை விடுவித்துக் கொள்ளவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 625 வாகனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக துறைமுகத்தில் உள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களுக்கு எதிராக எந்தவித சுங்கக் குற்றங்களும் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ், உரிய காலத்திற்குள் விடுவிக்கப்படாத வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனை செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஒரு மாதத்திற்குள் வரிகளைச் செலுத்தி விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிட்டால், விற்பனை மூலம் கிடைக்கும் தொகையில் அரசுக்கான வரி மற்றும் துறைமுகக் கட்டணங்கள் அறவிடப்பட்டு, மீதமுள்ள தொகை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும் என சுங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நியாயமான காரணங்களால் வாகனங்களை விடுவிக்க முடியவில்லை என இறக்குமதியாளர்கள் அறிவித்தால், அந்தக் காரணங்கள் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் சுங்கம் குறிப்பிட்டுள்ளது.








