தெவிநுவர வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் இன்று (28) நடைபெறும் காவடி நடன ஊர்வலத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
காவடி நடனத்தில் பங்கேற்பது தொடர்பாக இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டு காவடி நடனத்தை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அண்மையில் பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக நேற்று (27) மாலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், கடந்த ஆண்டுகளில் பங்கேற்ற அனைத்து காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, பொலிஸாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இன்று தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா, காவடி நடன நிகழ்வுடன் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், பெரஹரா பாதுகாப்பு விவகாரம் அரசியல் அரங்கிலும் கவனம் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக தற்போதைய அரசாங்கத்திடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி, புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை முறையாக பகுப்பாய்வு செய்து நடவடிக்கை எடுப்பது பொலிஸாரின் பொறுப்பு என்றும், அதனை அரசாங்கத்தின் தோல்வியாக சித்தரிப்பது சில தரப்புகளின் அரசியல் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக, நாட்டின் பாரம்பரிய மற்றும் கலாச்சார விழாக்களை குற்றக் கும்பல்களின் செல்வாக்கிற்கு உட்படுத்த இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.








