சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ரூபாய் 30 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சீனாவின் ஷீ-ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய அழகுக்கலை நிபுணர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, அவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் படி, குறித்த பெண் சீனாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணித்து, அங்கிருந்து மலேசிய எயார்லைன்ஸ் நிறுவனத்தின் MH-179 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டுவந்த பயணப் பொதிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட 20,400 சிகரெட்டுகள் அடங்கிய 102 சிகரெட் பொதிகளை மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








