இங்கிலாந்தின் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த பயணிகள் விமானம் ஒன்றுக்கு அருகே மர்ம பறக்கும் பொருள் ஒன்று வந்ததாக விமானி தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எயார்பஸ் A319 ரக பயணிகள் விமானம் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்தபோது, சசெக்ஸ் பகுதியிலுள்ள ஹேங்கிராஸ் அருகே தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானியின் தகவலின்படி, வட்ட வடிவிலான மர்ம பொருள் ஒன்று விமானத்தின் வலது இறக்கைக்கு சுமார் 100 முதல் 300 அடி தொலைவில் மிகவும் நெருக்கமாக வந்துள்ளது. நிலைமையை முன்கூட்டியே கவனித்த விமானி, பாதுகாப்பு நடவடிக்கையாக விமானத்தின் திசையை மாற்றியதால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர், சம்பவம் குறித்து விமானி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். குறித்த பொருள் வட்ட வடிவிலான தட்டு, டிரோன் அல்லது வேறு வகையான பறக்கும் பொருளாக இருக்கக்கூடும் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பொருளின் வெளிப்புற விளிம்புகளில் கருப்பு நிற அடையாளங்கள் காணப்பட்டதாகவும், அது நவீன டிரோனாக இருக்கலாம் என்றாலும் அதன் உண்மையான தன்மை அல்லது அது எங்கிருந்து வந்தது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் வேறு விமானங்கள் இல்லாததால், மர்ம பொருளை வேறு விமானிகள் எவரும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இங்கிலாந்தின் விமானப் பாதுகாப்பு சம்பவங்களை ஆய்வு செய்யும் Airprox அமைப்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.








