மேற்காசியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மயூர நெத்திகுமார, நாட்டில் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் மற்றும் நாப்தாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டு, 248 ரூபாவிலிருந்து 210 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு லீற்றர் நாப்தாவின் விலையும் 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
உலை எண்ணெய் மற்றும் நாப்தா விலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் குறைப்பை கருத்திற்கொண்டு, எதிர்வரும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்போது பொதுமக்களுக்கு அதற்கான நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சந்தையில் நிலவும் சர்வதேச சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டின் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







