மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தோட்டக் காணிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 8 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று (05) இரவு பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் தோட்டக் காணிகளுக்குள் நடமாடி வந்த குறித்த முதலை, அப்பகுதி மக்கள் வளர்த்து வந்த கோழிகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்த நிலையில், நேற்று இரவு தோட்டக் காணி வழியாக முதலை மீண்டும் வருவதை காணி உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சுருக்கு அமைத்து முதலையைப் பிடித்து கட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பிடிக்கப்பட்ட முதலையை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







