இலங்கையில் ATM இயந்திரங்களை இயக்கும் அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பார்வைக் குறைபாடுகள் மற்றும் ஏனைய மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் வசதி மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளை பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ATM இயந்திரங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், மாற்றுத்திறனாளிகள் பிறரின் உதவியின்றி தங்களது வங்கிச் சேவைகளை சுயமாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி மற்றும் வங்கிச் சேவைகளின் அணுகலை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








