பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே சம்பவம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாநகர சபையின் இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னரே முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ஜனக நிஷாந்த ரத்நாயக்கவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








